கால் மார்க்ஸின் "மூலதனம்" கொள்கைகளுக்கு முரணாக, "சமூக மூலதனம்" மூலம் பெரும் சொத்து சேர்த்துள்ளாரா அமைச்சர் லால் காந்த?
அரசியல் பிரதிநிதிகள் அனைவரும் ஒவ்வொரு ஆண்டும் தமது சொத்து மற்றும் பொறுப்பு விபரங்களைச் சமர்ப்பிக்க வேண்டும் என்ற சட்ட விதிகளுக்கு அமைய, விவசாய அமைச்சர் கே.டி. லால்காந்த தனது சொத்து விபரங்களைச் சமர்ப்பித்துள்ளார்.
2023 ஆம் ஆண்டின் 9 ஆம் இலக்க ஊழல் எதிர்ப்புச் சட்டத்தின்படி, கடந்த ஆண்டு டிசம்பர் 26 ஆம் திகதி இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவிடம் சமர்ப்பிக்கப்பட்ட இந்த அறிக்கையின்படி, அமைச்சரின் மொத்தச் சொத்துக்களின் பெறுமதி 460 மில்லியனுக்கும் அதிகம் எனத் தெரியவந்துள்ளது.
அந்த அறிக்கையின்படி,
அமைச்சருக்குச் சொந்தமான அசையாச் சொத்துக்களில் 56 மில்லியன் ரூபாய் பெறுமதியான 4,500 சதுர அடி பரப்பளவைக் கொண்ட குடியிருப்பு கட்டடமும் 14 பேர்ச் நிலமும் முக்கியமானவை.
இதற்கு மேலதிகமாக, நன்கொடை உறுதிப்பத்திரங்கள் மூலம் கிடைத்த 6 மில்லியன் ரூபாய் பெறுமதியான 2,500 சதுர அடி குடியிருப்பு கட்டடம் மற்றும் 10 பேர்ச் நிலமும்,
2.5 மில்லியன் (25 இலட்சம்) ரூபாய் பெறுமதியான நிரந்தரக் கட்டடம் மற்றும் 20 பேர்ச் நிலமும் அவருக்குச் சொந்தமாக உள்ளன.
மேலும்,
வாரிசுரிமை மூலம் தனக்குக் கிடைத்த 25 இலட்சம் ரூபாய் பெறுமதியான 1,500 சதுர அடி பரப்பளவு கொண்ட குடியிருப்பு கட்டிடம் மற்றும் வணிகக் கட்டிடம் ஒன்றையும் தனது அசையாச் சொத்துக்களாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அசையும் சொத்துக்களின் கீழ்,
45 இலட்சம் ரூபாய் பெறுமதியான மோட்டார் வாகனம்,
16 இலட்சம் ரூபாய் பெறுமதியான 8 பவுண் தங்க ஆபரணங்கள் மற்றும்
3 மில்லியன் (30 இலட்சம்) ரூபாய் பெறுமதியான ஒரு தங்கக் காசு ஆகியவற்றை அமைச்சர் கொண்டுள்ளார்.
இந்தச் சொத்து விபர அறிக்கையில் உள்ள மிக விசேடமான விடயம் என்னவென்றால்,
10 தனியார் நிறுவனங்கள் சார்ந்து அவர் மேற்கொண்டுள்ள முப்பத்தெட்டு கோடியே முப்பத்தொன்பது இலட்சத்து ஆறாயிரத்து எழுநூற்று ஐந்து ரூபாய் நாற்பது சத (ரூ. 383,906,705.40) பெறுமதியான பிணையங்கள் முதலீடாகும்.
அமைச்சரின் வருடாந்த வருமான ஆதாரங்களைக் கருத்தில் கொள்ளும்போது, சம்பளம் மூலம் 7,38,918 ரூபாயும்,
சொத்துக்களை வாடகைக்கு விடுவதன் மூலம் 4,00,000 ரூபாயும்,
ஓய்வூதியமாக 7,71,400 ரூபாயும் வருமானம் ஈட்டுவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
அவர் நிலையான வைப்புக்கள் (Fixed Deposits) மூலம் வருடாந்தம் 27,55,851 ரூபாய் வருமானம் ஈட்டுவதோடு, தனது தற்போதைய தொழில் மூலம் வருடாந்தம் 18,00,000 ரூபாய் வருமானத்தைப் பெறுவதாகவும் அந்தச் சொத்து விபர அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.